கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழை காரணமாகப் பல முக்கியச் சாலைகளில் திடீர் வெள்ளம் (Flash Flood) ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பிய பொது மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
தலைநகரின் மையப்பகுதிகளான ஜாலான் பார்லிமென் (Jalan Parlimen), ஜாலான் புடு (Jalan Pudu), ஜாலான் சுல்தான் இஸ்மாயில் (Jalan Sultan Ismail) ஆகிய சாலைகளும், ஜாலான் ராஜா சூலான் நோக்கிச் செல்லும் பெவிலியன் (Pavilion) மேம்பாலச் சந்திப்பு, மலேசிய மத்திய வங்கி (BNM) முதல் மஸ்ஜித் ஜாமேக் வரையிலான பகுதிகள் மற்றும் ஜாலான் லோக் யூ (Jalan Loke Yew) ஆகிய இடங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நகர முடியாமல் திணறுவதையும், கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதையும் பொதுமக்கள் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இன்று மாலை 5.22 மணியளவில் ‘@Morpheus’ என்ற Threads பயனர் வெளியிட்டுள்ள பதிவில், ஜாலான் ராஜா சூலான் நோக்கிச் செல்லும் பெவிலியன் சந்திப்பில் ஏற்பட்ட திடீர் வெள்ளமே அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான ஸ்தம்பிப்பிற்கு முதன்மைக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனரான ‘@Nrjnnah’ என்பவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஜாலான் கியா பெங் (Jalan Kia Peng) பகுதியில் பலத்த மழை பெய்யும் போதெல்லாம் வெள்ள நீர் சூழ்வது வழக்கம் என்பதால், வாகன ஓட்டிகள் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு ‘கான்லே’ (Conlay) எம்ஆர்டி (MRT) சந்திப்பு வழியாக யு-டர்ன் (U-Turn) செய்து மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், ஜாலான் செமாராக் பகுதியில் உள்ள மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (UTM) மசூதி வளாகத்தில், பலத்த சூறைக்காற்று வீசியதால் அங்கிருந்த தற்காலிகக் கூடாரங்கள் காற்றில் பறந்தன. மேலும், அங்குப் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜாலான் புடு பகுதியிலும் வெள்ள நீர் மட்டக் குறியீட்டைத் தாண்டி நீர் ஏறியதால், சில வாகனங்கள் வெள்ள நீரில் ஆபத்தான முறையில் பயணிப்பதைக் காண முடிந்தது.
இருப்பினும், இந்த திடீர் வெள்ளம் மற்றும் மோசமான வானிலையால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவோ எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post கோலாலம்பூரில் வெளுத்து வாங்கிய கனமழை: முக்கியச் சாலைகளில் திடீர் வெள்ளம் – மாலையில் நிலைகுத்திய போக்குவரத்து! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

