Last Updated:
பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம் மட்டுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை மற்றும் அரசு சலுகைகளுக்கான தகுதிச் சான்றாக பாஸ்போர்ட்டை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும், சர்வதேசப் பயணத்தை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டில் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் உதவுவதே அந்த ஆவணத்தின் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் என்பது முற்றிலும் ஒரு பயண ஆவணம் என்றும், அதனை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மும்தாஜ் படேல், குடிமக்கள் தங்கள் குடியுரிமையை எவ்வாறு நிரூபிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, இந்திய குடியுரிமைக்கான ஒரே ஆதாரம், இந்துவாகவும் பாஜக வாக்காளராகவும் இருப்பதுதான் என்று தோன்றுவதாக விமர்சித்துள்ளார்.
பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முழுமையாகத் தகுதி பெறாத பட்சத்தில், இந்தியாவில் குடியுரிமைக்கான உறுதியான சான்றாக எது கருதப்படும் என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


