இராகவன் கருப்பையா – தந்தையரின் தியாகங்களை போற்றி, பாராட்டி, மகிழும் வகையில் வார இறுதியில் கொண்டாடப்பட்ட ‘தந்தையர் தின’ நிகழ்ச்சிகள் எல்லா தந்தைகளுக்கும் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்தனவா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.
இந்த விவகாரம் அகநிலைக்குரிய ஒன்று. ஏனெனில் ‘ஒரு நாள் கூத்துக்காக’ முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நிறைய தந்தைமார்கள் அதற்கு அடுத்த நாளே அந்த மையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
‘ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே…..மறுநாள் பார்க்கையில் மாறியிருந்தான் ஜாடையிலே,’ எனும் ‘எங்கள் தங்கம்’ திரையில் இடம்பெற்ற பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நிலையில் பல நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு உன்னதமான தினமாகும்.
‘தோளில் சுமந்து உலகம் காட்டியவர் தந்தை, தோல்வி வந்த போதும் தைரியம் ஊட்டியவர் தந்தை. தன் கனவுகளை மௌனமாய் புதைத்துவிட்டு, பிள்ளையின் கனவுகளுக்கு சிறகாய் நின்றவர் தந்தை.’
‘வியர்வைத் துளிகளை விதையாக விதைத்து, வாழ்க்கை என்ற தோட்டத்தை மலரச் செய்தவர் தந்தை. அன்பை அதிகம் பேசாதிருந்தாலும் அவரின் ஒவ்வொரு செயலும் அன்பின் மொழியே.’
‘என் அப்பா, என் வாழ்வின் வழிகாட்டி, என் வெற்றியின் பின்னணி, என் துயரத்தைத் தாங்கும் தளம, என் வாழ்வின் மூச்சு, என் உலகம். உங்கள் அன்பு, ஆதரவு, தியாகம், என்றும் என்னை வாழ வைக்கும். இன்று உங்கள் நாள், என்றும் என் இதயத்தில் நீங்களே முதலிடம்.’
இப்படியாக, எண்ணற்ற வசனங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாகவோ நேரடியாகவோ வாய் நிறைய உதிர்த்து தந்தைமார்களை அசத்திவிடுவார்கள் நிறைய பிள்ளைகள்.
சில இல்லங்களில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, கே.எஃப்.சி(KFC), பிஸ்ஸா(Pizza) போன்ற உணவு வகைகள் கூட தடபுடலாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் கைபேசியில் பல கோணங்களில் ‘தம்படம்'(Selfie) எடுத்து, பார்த்து பகிர்ந்து மகிழ்வார்கள்.
ஆனால் அடுத்த நாளே என்ன நடக்கிறது? முதல் நாள் போற்றிப் புகழ்ந்து உச்சத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தத் தந்தை பல இல்லங்களில் உதாசினப்படுத்தப்படுகிறார். வேண்டாதப் பொருளைப் போல தூக்கி எறியப்படுகிறார்.
ஊர் மெச்சிக்க, ஒரு நாள் பத்தா அலங்கரிப்புக்காக முதியோர் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்படும் தந்தையர் அங்கேயே மீண்டும் அனுப்பப்படுகின்றனர். நிறைய பேருக்கு அது, ஒரு வழி பயணம்தான். வீட்டில் நிறந்தர இடம் கிடையாது.
இதில் அக்கறை வசனம் பேசும் பிள்ளைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். ‘”He is very happy at the old folks home”(முதியோர் இல்லத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்). “He has lots of friends there”(அவருக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்). இப்படியெல்லாம் பேசி சமாதானம் கூறுவார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்ட தந்தையர்களிடம் பேசும் போது முற்றிலும் மாறுபட்ட கதை அம்பலமாகும். கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து, அவர்கள் பேசும் கதைகள் ஏறாலம். பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாத சூழலும் கூட நிறைய தாத்தாக்களுக்கு உண்டு.
அவர்களில் பலர் இறந்த பிறகும் கூட இறுதி காரியங்களுக்காக உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை. ‘Funeral Parlour’ எனப்படும் ஈமச்சடங்கு நிலையங்களின் பயன்பாடு தற்பொழுதெல்லாம் புதிய கலாச்சாரமாகிவிட்டது. அதற்கும் கூட பொருத்தமானக் காரணங்களை அடுக்குவார்கள்.
நிறைய இல்லங்களில் இதுதான் யதார்த்தம். இப்படிதான் பல தந்தையர் நடத்தப்படுகின்றனர். இப்படிதான் பலருடைய அந்திமகாலம் மிகவும் பரிதாபகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
பாசம் எனும் போர்வையில் பல ‘லட்சணமான’ பிள்ளைகள் ஜூன் மாதத்தின் 3ஆது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக இப்படிதான் கொண்டாடுகின்றனர். அவை அர்த்தம் பொதிந்தவைதானா?
எனினும் பெற்றோருக்கு உரிய மரியாதைக் கொடுத்து, விசேஷ தினங்கள் மட்டும்தான் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் அவர்களுடையத் தேவைகளை நிறைவாக கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மிக்க பிள்ளைகள் ஆற்றும் பங்கையும் நாம் இங்கு நினைவுக் கூரத்தான் வேண்டும்.

