2030-இல் 1 கிராம் தங்கம் ரூ.30,000-த்தை எட்டும்! நிபுணர்கள் சொல்வதைக் கேட்டால் தலை சுற்றும்!
தங்கத்திற்கு தனி இன்ட்ரோ கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் தமிழர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டுமின்றி ஆபத்துக் காலத்தில் உதவும் உற்ற தோழனாகவும் பார்க்கின்றனர். சொந்தக்காரர்களே ஒரு ரூபாய் கடன் தருவதற்கு யோசிக்கும் இந்த சூழலில் கையில் நகை இருந்தால் போதும்.. உடனே அதை அடமானம் வைத்து பணம் பெறலாம். இதனால் தலைமுறை தலைமுறையாக தங்கத்தில் தமிழர்கள் செய்யும் முதலீடு மட்டும் குறையவே இல்லை.
சமீப நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானியர்களுக்கு 1 கிராம் வாங்குவதே பெரிய விஷயமாக மாறியிருக்கிறது. இன்றைய பொருளாதார சூழலை பார்க்கும்போது 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பதிவில் 2030-ஆம் ஆண்டு 1 சவரன் தங்கம் என்னவாக இருக்கும்? என்பதைப் பார்ப்போம்.
தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் கண்டிப்பாக தங்கத்தின் விலை தற்போதைய விலையை விட 2 மடங்காக உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் 2030-ஆம் ஆண்டிற்குள் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் 30,000 ரூபாயை எட்டும் என்றும், இதனால் 1 சவரன் தங்கம் ரூ.2,40,000 ஆக மாறும் என்றும் கூறுகின்றனர். அப்படி ஒரு வேளை விலை அதிகரித்தால் 10 கிராம் தங்கம் வாங்கவே 3 லட்சம் ரூபாய் செலவாகும்.

நாளுக்கு நாள் பணத்தின் மதிப்பு பணவீக்கத்தால் குறைந்து வருகிறது. முன்பு 100 ரூபாய்க்கு நாம் வாங்கிய பொருட்களில் இன்று பாதியை கூட வாங்க முடிவதில்லை. அப்படி இருக்கும் சூழலிலும் தங்கம் வரலாற்று ரீதியாக தனது மதிப்பை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. 2000-ஆம் ஆண்டில் நீங்கள் வாங்கிய தங்க விலையையும், இன்று நீங்கள் வாங்கும் தங்க விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். இதனால் தான் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்கள் தொடர்ந்து தங்கத்தை சேமித்து வருகின்றன. மக்கள் தான் தங்கத்தை வாங்குகிறார்கள் என்று பார்த்தால்.. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளும் தற்போது தங்கத்தையே அதிக அளவில் சேமித்து வருகின்றன.
இதை படிக்கும் நகைப் பிரியர்களுக்கு தலை சுற்றலாக இருக்கும். ஆனால் இதன் பின்னால் சில காரணங்கள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தை சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. அதேபோல புதிய தங்க சுரங்கங்களை கண்டுபிடிப்பதும் குறைய தொடங்கியுள்ளது. தேவை அதிகரித்து வரத்து குறையும் போது விலை அதிகரிப்பது இயல்பு தானே. இதே நிலைதான் இனிவரும் காலங்களிலும் நடக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, போர், புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே மக்கள் கருதி வருகின்றனர். அதேபோல உலகளாவிய மத்திய வங்கிகள் உதாரணமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் தங்களுடைய தங்கை இருப்பை அதிகரித்து வருகின்றன. இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக மாறியுள்ளது.
2030 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை யாராலும் உறுதியாக கூற முடியாது. ஆனாலும் பணவீக்கம், பொருளாதார மாற்றங்கள், மத்திய வங்கிகளின் முடிவுகள் போன்றவை விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் நிபுணர்களின் கணிப்புகள் உண்மையாகும் சூழலே தற்போது வரை நிலவி வருகிறது.
எனவே இன்று விற்பனை செய்யப்படும் விலை நாளை முன்பே வாங்கியிருக்கலாம் என்று நம்மை யோசிக்க வைக்கும் வாய்ப்பும் உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் எட்டா கனியாக தங்கம் மாறுவதற்கு முன்னர் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.
குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைக்கு திட்டமிடுபவர்கள் தாமதிக்காமல் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய போக்கே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுக்குள் பல குடும்பங்களுக்கு தங்கம் என்பது எட்ட முடியாத சொத்தாக மாறிவிடும் என்றே சொல்லப்படுகிறது.

