Sports
oi-Yogeshwaran Moorthi
டல்லாஸ்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 2 அபார கோல்களை அடித்து, உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஜெர்மனி அணியின் முன்னாள் ஜாம்பவான் மிரோஸ்லாவ் குளோசேயின் 16 கோல்கள் என்ற சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளார். இப்போட்டிக்கு முன்பாக மெஸ்ஸி மற்றும் மிரோஸ்லாவ் குளோசே ஆகிய இருவரும் தலா 16 கோல்களுடன் சமநிலையில் இருந்தனர். போட்டியின் முதல் பாதியில் மெஸ்ஸி அடித்த மிரட்டலான முதல் கோல் மூலம் தனது 17வது கோலை அடித்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மற்றொரு கோலையும் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்ததோடு, உலகக்கோப்பை தொடர்களில் தனது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையை 18ஆக உயர்த்தி முதலிடத்தை பிடித்திருக்கிறார். லியோனல் மெஸ்ஸி இந்த 18 கோல்களை எட்டியதன் மூலம் ஆடவர் சாதனையை முறியடித்தது மட்டுமின்றி, மகளிர் உலகக்கோப்பை சாதனையையும் முறியடித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ஜாம்பவான் மார்த்தா வைத்திருந்த 17 கோல்கள் என்ற சாதனையையும் மெஸ்ஸி முறியடித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார். நடப்பு 2026 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஹேட்ரிக் கோல் அடித்தார் மெஸ்ஸி.
தற்போது ஆஸ்திரியாவுக்கு எதிராக 2 கோல்களை அடித்து இத்தொடரில் மட்டும் 5 கோல்களுடன் கோல்டன் பூட் ரேஸில் முன்னிலையில் உள்ளார்.
மேலும், 2022 கத்தார் உலகக்கோப்பை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 6 உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த ஜஸ்ட் ஃபொன்டைன் மற்றும் ஜெய்ர்சின்ஹோ ஆகியோரின் சாதனையையும் மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.
மெஸ்ஸியின் இந்த இமாலய சாதனையை உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மெஸ்ஸியின் இந்த ஃபார்ம் நாக் அவுட் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்று அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். மெஸ்ஸியின் ஃபார்ம் காரணமாக நாளுக்கு நாள் கால்பந்து உலகக்கோப்பை மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

