Last Updated:
உத்தரபிரதேச லக்னோ அலிகஞ்ச் அனிமேஷன் பயிற்சி மைய தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோவில் செயல்பட்டு வந்த அனிமேஷன் பயிற்சி மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, அங்கு பயின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கனவுகளை எரித்து சாம்பலாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் மூன்று மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தில் செல்லப்பிராணி கிளினிக், அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றன. மேல் தளத்தில் உள்ள பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் திடீரென தீ பற்றியது. அது மளமளவென பரவி, கட்டடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் செய்வது அறியாது அலறித் துடித்த நிலையில், சிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். பலர் வெளியே வர முடியாமல் பயிற்சி மையத்திலேயே சிக்கினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஹைட்ராலிக் இயந்திரம் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். மற்றொரு குழு, கட்டடத்தின் பக்கவாட்டு சுவரை இடித்து, உள்ளே சிக்கியிருந்த மாணவர்களை வேக வேகமாக மீட்டனர்.
இதற்கிடையே, விபத்து நேர்ந்த கட்டடத்தின் இயங்கிவந்த ’பெட்’ கிளினிக்கில் இருந்து செல்லப்பிராணிகள் மீட்கப்பட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கட்டடம் முழுவதும் ஆய்வு செய்ததில் மொத்தம் 15 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கட்டடத்தில் இருந்து குதித்த மாணவர்கள் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக பிரதமர் அறிவித்துள்ளார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட கட்டடம் 2014ஆம் ஆண்டு குடியிருப்புக்காக அனுமதி பெற்று, விதிகளை மீறி வணிக வளாகமாக மாற்றப்பட்டது அம்பலமாகியுள்ளது. லக்னோ மாநகராட்சி, 2022ஆம் ஆண்டு முதல் வணிக வரி வசூலித்து வருவதும் தெரியவந்ததை அடுத்து, மொத்தம் 16 அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


