உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த முஷர்ரப் என்பவர், தனது மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் உள்ளூர் கிராமவாசிகள் மூலம் பொலிஸாருக்குத் தெரியவந்தது.
பொலிஸாரின் விசாரணை ஆரம்பமானதைக் கண்ட முஷர்ரப், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (21) இரவு பதேபூர் காட் – திக்ரி சாலையில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முஷர்ரப் அடையாளம் காணப்பட்டார். பொலிஸாரைச் சுற்றி வளைத்தபோது, அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பொலிஸாரைச் சரமாரியாகச் சுட்டுத் தப்பிக்க முயன்றார். தற்காப்புக்காகப் பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில், முஷர்ரப்பின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.
படுகாயமடைந்த முஷர்ரப்பைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டன. அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

