இந்நிலையில், ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதினர்.
இந்நிலையில், பீகாரில் அரங்கேறிய தேர்வு முறைகேடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அம்மாநிலத்தில் ஒரு வசூல்ராஜா கும்பலே களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் போது, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள்மாறாட்டக் கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக போலி தேர்வர்களை வைத்து தேர்வு எழுத முயன்ற வழக்கில், மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் என 24 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். லக்கிசராயில் உள்ள ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்குள் மயங்க் கஷ்யப் என்ற நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் தேர்வு நடத்தும் பயோமெட்ரிக் நிறுவனத்தின் ஊழியர் போல போலி அடையாள அட்டையை மாட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, லக்கிசராயில் உள்ள கே.ஆர்.கே பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய தேர்வு மையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.இந்த நீட்தேர்வு மோசடியில் பல மருத்துவ மற்றும் நர்சிங் மாணவர்கள் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. கயா என்ற மருத்துவ கல்லூரி மாணவர் தான் இந்த நெட்வொர்க்கிற்கு தலைவனாக இருந்து வழிநடத்தியிருக்கிறான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே 2024 ஆண்டு நடந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த நர்சிங் மானவி, ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர், டெல்லி ஷாதரா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர் மற்றும் நாலந்தா மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவர், அவரது சகோதரர் ஆகியோர் போலி ஐடி கார்டு மூலம் தேர்வு எழுத வந்து போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர். இவர்களில் பலர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதே பிடிபட்டனர்.
தேர்வு மையங்களில் மாணவர்களின் கைரேகை மற்றும் முக அடையாளங்களைச் சரிபார்க்கும் பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்கள் இந்த கும்பலிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பீகாரில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தங்களது மாணவர்கள் யாரும் தேர்வு நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கடுமையான உத்தரவுகளை போட்டிருந்தன.
ஆனால் உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டு பாட்னா கல்லூரியை சேர்ந்த மயங்க் கஷ்யப் இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்வு உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பெரிய புள்ளிகள் யார்? என்பது குறித்து பீகார் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நுழைவுத் தேர்விலேயே மோசடியை அரங்கேற்றி நுழையும் மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி ஒரு சிறந்த மருத்துவதாக உருவாக முடியும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடி எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதைக் கவனிக்கும்போது, தேர்வு மோசடி என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருப்பதை காணமுடிவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறப்பான கல்வியறிவும், சேவை மணப்பான்மையும் கொண்ட மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் நிராகரிக்கப்படும் அதே நேரத்தில், குறுக்குவழியில் வந்து மருத்துவ சீட்டை கைப்பற்றும் இதுபோன்ற மோசடி நபர்கள் எப்படி கட்டுப்படுத்தப்படப் போகிறார்கள்.

