கோலாலம்பூர், தாய்மொழிப் புலமையை, குறிப்பாக இளைஞர்களிடையே, வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடகங்களில் அடிக்கடி எழும் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான பிரச்சினைகள் பரவி, சமூகத்தை மேலும் பிளவுபடுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் 3R தொடர்பான பிரச்சினைகளை நாம் கிட்டத்தட்ட தினந்தோறும் காண்கிறோம். என் கருத்துப்படி, இது ஒருவருக்கொருவரின் வரலாறுகள், மொழிகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் குறித்த புரிதல் இல்லாததிலிருந்து உருவாகிறது. மொழி என்பது தகவல் தொடர்புக்கு அப்பாற்பட்டது; அது சமூகங்களை வடிவமைக்கும் அடையாளம், பாரம்பரியம் மற்றும் விழுமியங்களைத் தன்னுடன் சுமந்து செல்கிறது,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
மலேசியாவில் சுமார் 130 மொழிகள் இருப்பது, நாட்டின் வளமான மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது என்றும், இது பிளவுகளுக்கான ஒரு காரணமாகக் கருதப்படாமல், ஒரு பலமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் யுனேஸ்வரன் கூறினார். ஒருவரின் தாய்மொழி அறிவு, தேசிய மொழியையோ அல்லது பிற மொழிகளையோ கற்பதற்குத் தடையாக அமையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு இந்தியனாக சீன மற்றும் தேசியப் பள்ளிப் பிரிவுகளில் பயின்ற ஒரு மலேசியனாக, ஒருவரின் தாய்மொழியில் உள்ள புலமை, தேசிய மொழியைத் தழுவுவதற்கோ அல்லது பிற மொழிகளைக் கற்பதற்கோ தடையாக இருப்பதில்லை என்று நான் நம்புகிறேன்.மாறாக, அது நமது சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவும், பிற பண்பாடுகளுக்கு அதிக மரியாதையை வளர்க்கவும் நமக்கு உதவுகிறது என்று அவர் கூறினார்.
புரிதல், மரியாதை மற்றும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ளும் விருப்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட முயற்சிகள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதை வலுப்படுத்தும் ஒரு முக்கியப் பொறுப்பு, 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்கான திறந்த மனப்பான்மையுடன் இந்த முயற்சி தொடங்குகிறது. மொழி நம்மை ஒன்றிணைக்கிறது.அதே சமயம் ஒற்றுமை மலேசியாவை வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.



