Last Updated:
அமெரிக்காவின் நட்புறவை இத்தாலி பிரதமர் மெலோனி விரும்புவதாக அதிபர் டிரம்ப் அதற்கு பதிலளித்துள்ளார்.
சரிந்த தனது செல்வாக்கை உயர்த்த அமெரிக்காவின் நட்புறவை மெலோனி விரும்புவதாக டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், தனது செல்வாக்கு தேச நலனை பாதுகாத்ததால் வந்தது என மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.
உள்நாட்டில் செல்வாக்கை இழந்த இத்தாலி பிரதமர் மெலோனி, ஜி7 உச்சிமாநாட்டில் தன்னுடன் புகைப்படம் எடுத்து செல்வாக்கை உயர்த்த முயன்றதாகவும், அதற்கு தான் மறுத்துவிட்ட நிலையில் மெலோனி மீது தனக்கு பரிதாபம் ஏற்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். டிரம்பின் கூற்று முற்றிலும் பொய் என மறுத்த மெலோனி, தானும் இத்தாலியும் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சியதில்லை என்றார்.

மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த டிரம்ப், இத்தாலி உள்ளிட்ட நேட்டோ நாடுகளை பாதுகாக்க அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை செலவிட்டதாகக் குறிப்பிட்டு, இருந்தபோதிலும் இத்தாலியின் ராணுவ தளங்களை கூட பயன்படுத்த அவர் அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். தற்போது ஈரானை அமெரிக்கா ராணுவ ரீதியாக தோற்கடித்த நிலையில், தனது செல்வாக்கை உயர்த்த அமெரிக்காவின் நட்புறவை மெலோனி விரும்புவதாகவும் கூறி, அதற்கு “No thanks…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது செல்வாக்கு தேச நலனை பாதுகாத்ததால் வந்தது என டிரம்புக்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விஷயத்தில் ஒப்பந்தப்படியே நடந்துகொண்டதாகவும், தான் பிரதமராக நீடிக்கும் வரை அதனை மீற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


