Last Updated:
வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி, 85 நாட்களில் ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரும் ‘APB 04’ புதிய கம்பு ரகம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வறட்சியைத் தாங்கி, வெறும் 85 நாட்களில் ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடிய புதிய ரக கம்பு பயிரை, விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வானூர் வட்டாரத்தின் தைலாபுரம் கிராமத்தில், முன்னோடி விவசாயி ஹரிராம் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் ‘ஏ.பி.வி.04’ (APB 04) என்ற புதிய ரக கம்பு விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையை விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜமுனா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் மதனகுமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ‘ஏ.பி.வி.04’ கம்பு ரகம் இரும்புச் சத்து மற்றும் துத்தநாகச் சத்து இயற்கையாகவே அதிகளவில் கொண்ட உயிர்ச்சத்து செறிவூட்டப்பட்ட (Bio-fortified) ரகமாகும். இதனால் மனிதர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், ரத்தசோகை போன்ற குறைபாடுகளைத் தடுக்கவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கம்பு ரகத்தின் ஆயுட்காலம் வெறும் 85 நாட்கள் மட்டுமே என்பதால், குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெற விரும்பும் விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். கடுமையான வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையையும் தாங்கி வளரும் திறன் கொண்ட இந்த ரகம், காரீப் பருவ சாகுபடிக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரக கம்பு ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடிய திறன் கொண்டதாகவும், விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதைப்பண்ணையின் வளர்ச்சி மற்றும் தரம் குறித்து விவசாயி ஹரிராமிடம் கேட்டறிந்த வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், “இந்த புதிய கம்பு ரகம் காரீப் பருவம் மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆடிப்பட்ட பருவத்தில் தமிழக விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். இந்த ஆய்வின்போது, வானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், முன்னோடி விவசாயிகள் சேதுராமன், அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

