Last Updated:
NEET Re-Exam | நாக்பூரை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு கல்யாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் நாளை, 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை, சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்நிலையில், முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது, சோதனை செய்வது என பாதுகாப்பு படை வீரர்களும் ஒத்திகையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக, வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகாரம் செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆள் மாறாட்டத்தை தடுக்க இன்றும், நாளையும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாக்பூரை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் உதவி மையத்தை தொடர்பு கொண்ட போது, இன்று மாலைக்குள் தேர்வு மையம் மாற்றி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக மாணவரின் தந்தை முகமது தலிப் தெரிவித்தார்.
மேலும், அபுதாபியில் மையம் ஒதுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனது மகன், தேர்வுக்கே செல்ல மாட்டேன் என்று கூறியதாகவும் முகமது குறிப்பிட்டுள்ளார். தாய் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, மீண்டும் தேர்வுக்கு தனது மகன் ஆயத்தமாகி வருவதாக முகமது தெரிவித்துள்ளார்.
தேர்வு மைய குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாக்பூர் மாணவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறதா என்று வினவியுள்ளார். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பொறுமையை தேசிய தேர்வு முகமை சோதிப்பதாக சாடியுள்ள ராகுல் காந்தி, குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கிய மாணவருக்கு நாக்பூரிலேயே வேறு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.
Jun 20, 2026 12:43 PM IST


