Last Updated:
Kuruvai Scheme| குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ₹4,000 மானியம் வழங்கப்படுகிறது. உழவர் செயலி மூலம் பதிவு செய்து அரசு சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் “குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு ரூ.6 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் நெல் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை இந்த மானியத்தை பெறலாம். மேலும், நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. அதோடு, திரவ உயிர் உரங்கள், தரமான நெல் விதைகள் விநியோகம் மற்றும் புதிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) விவசாயிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘உழவர் செயலி’ (Uzhavan App) மூலம் உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


