Last Updated:
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா தெரிவித்துள்ளார்.
நடப்பு குறுவை பருவத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியினை சிறப்பாக மேற்கொள்ள இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பூதலூர் வட்டாரத்தில் இயந்திர நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
மானிய ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொது இனத்தில் 2700 ஏக்கர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தில் 300 ஏக்கர் என மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் நெல் நுண்ணூட்ட உரக்கலவை விநியோகம் செய்ய ஒரு ஏக்கருக்கு 147.60 ரூபாய் அல்லது 50 சதவீத மானியம் அளித்திட பொது இனத்துக்கு 700 ஏக்கர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்துக்கு 300 ஏக்கர் ஆக மொத்தம் ஆயிரம் ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயனைப் பெற 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து நெல் சாகுபடி விவசாயிகளும் தகுதி உடையவர் ஆவர்.திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் பரப்பிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தங்களின் ஆதார் எண் நடவு செய்த ரசீது கணினி சிட்டா அடங்கல் மற்றும் வங்கி புத்தக நகல் இயந்திர நடவு செய்தமைக்கான புகைப்படம் ஆகிய ஆவணங்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்து அந்த ஆவணங்களை தங்களின் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கு பின் மானியம் வழங்க பரிந்துரைக்கப்படும்இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் தங்களின் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் அல்லது உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

