Last Updated:
கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (18ஆம் தேதி) தொடங்கியது. புதிய அரசின், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதில் உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசின் புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.
மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் உற்பத்தியும் கடுமையாகப் பாதிப்படையும். இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது. மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது. மேகதாது அணை ஒரு ‘பேலன்சிங் அணை’. அதில் இருந்து ஒரு பக்கெட் நீர் கூட பாசனத்திற்காக எடுக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.


