டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌத்த மதகுருவான வணக்கத்திற்குரிய வினீத மஹாயயே, பாலியல் செயல்களுக்காகப் பணம் வழங்க முயன்றதாகக் கூறி, கடந்த சனிக்கிழமை போஸ்டன் பொலிஸாரின் மனிதக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தனது பல்கலைக்கழக மதகுரு பதவியிலிருந்து திங்கட்கிழமை (15) ராஜினாமா செய்துள்ளார்.
32 வயதான மஹாயயே, இந்த விவகாரம் தொடர்பாக தான் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இவர் மீது ‘பாலியல் தொழிலுக்காகப் பணம் செலுத்தியது’ (sex for a fee) என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போஸ்டன் பகுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளையொட்டி, மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற பெயரில் பொலிஸார் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, பாலியல் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில், பொலிஸார் போலி விளம்பரங்களை வெளியிட்டனர். அந்த விளம்பரங்களுக்குப் பதிலளித்து, பாலியல் செயல்களுக்காக 125 டொலர் முதல் 400 டொலர் வரை பணம் செலுத்த முன்வந்த ஐவரில், மஹாயயேவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போஸ்டன் டவுன்டவுனில் உள்ள ‘மொக்ஸி’ (Moxy) ஹோட்டலில் வைத்துப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் தாம் தருவதாகக் கூறிய அதே தொகை பணமாக இருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேட்ரிக் கொலின்ஸ் கூறுகையில், “வணக்கத்திற்குரிய வினீத மஹாயயே தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக எமக்கு அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக மதகுரு ரெவரெண்ட் எலிஸ் நெல்சன் விங்கர், மஹாயயேவின் ராஜினாமாவை உறுதிப்படுத்தியதுடன், புதிய மதகுருவைத் தேடும் பணிகள் இந்த கோடையில் தொடங்கப்படும் என்றும், பௌத்த மதகுருவின் அனைத்துச் செயற்பாடுகளும் வழமைபோலத் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க மஹாயயேவின் சட்டத்தரணி கேத்தரின் கூன்ட்ஸ் உடனடியாக முன்வரவில்லை. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து மஹாயயேவின் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன.


