Last Updated:
உலகப் புகழ்பெற்ற ‘பிரம்மோஸ்’ முதல் ‘அஸ்த்ரா’,’ருத்ரம்’ ஏவுகணைகள் வரை, இந்தியா தனக்கென ஒரு வலுவான உள்நாட்டு ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ளது
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்கள் மற்றும் சுயசார்பு நிலையை விளக்கும் முக்கியத் தகவல்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘மைகவ் இந்தியா’ (MyGov India) வெளியிட்டிருந்த செய்தித் தொகுப்பை ரீ போஸ்ட் செய்துள்ள பிரதமர், இந்தியா எவ்வாறு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழிப் பாதுகாப்புத் திறன்களை உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மூலம் வலுவாக்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தப் பதிவில் “எந்தவொரு நாடு சரியான நேரத்தில் தங்களது பாதுகாப்புத் திறன், தொழில்நுட்பம் மற்றும் நெகிழ்வுத்தன்மையில் முதலீடு செய்கிறதோ, அதற்கே எதிர்காலம் சொந்தமானது. கடந்த 12 ஆண்டுகால இந்தியாவின் பாதுகாப்புத் துறைப் பயணம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சுயசார்பின் அடையாளமாக ‘தேஜஸ்’ (Tejas) போர் விமானம் உருவெடுத்துள்ளது. எச்.ஏ.எல் (HAL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானம், இந்தியாவாலேயே அதிநவீன போர் விமானங்களை வடிவமைத்து தயாரிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது. தேஜஸ் Mk-1A ரக விமானங்கள் படையில் இணைக்கப்பட்டதும், Mk-2 ரக விமானங்களின் தற்போதைய மேம்பாடும் இந்தியாவின் உள்நாட்டுப் போர் விமான உற்பத்திச் சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.
மேலும், இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்புப் அமைப்பில் ‘ஆகாஷ்’ ஏவுகணை அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்த தலைமுறைக்கான ‘ஆகாஷ்-என்ஜி’, எதிரிகளின் இலக்குகளை மிகத் துல்லியமாகக் கண்காணித்துத் தாக்கும் வல்லமை கொண்டது. அதேபோல், ‘பினாகா’ ஏவுகணை அமைப்பு ராணுவத்தின் பீரங்கிப் படைத் திறனைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது.
இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கப்பல் கட்டும் திறனின் உச்சமாக ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம் தாங்கி கப்பல் திகழ்கிறது. நாட்டின் பாதுகாப்புப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்று மைல்கல்லாக ‘ஐஎன்எஸ் அரிகந்த்’ அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படையில் இணைக்கப்பட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பிராஜெக்ட் 17A ஸ்டெல்த் ஃபிரிகேட்டுகள், பிராஜெக்ட் 15B டிஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள் மற்றும் ‘கல்வரி’ ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியக் கடற்படை நவீனமயமாக்கப்பட்டு, அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.
இந்தியாவின் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் பாதுகாப்புத் திறனை ‘அக்னி-V’ ஏவுகணை உறுதி செய்துள்ளது. உலகப் புகழ்பெற்ற ‘பிரம்மோஸ்’ சூப்பர்சோனிக் ஏவுகணை முதல் ‘அஸ்த்ரா’ மற்றும் ‘ருத்ரம்’ ஏவுகணைகள் வரை, இந்தியா தனக்கென ஒரு வலுவான உள்நாட்டு ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ளது.
இதுதவிர, இராணுவப் போக்குவரத்துக்கான ‘C-295’ விமானத் தயாரிப்புத் திட்டம் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள அந்தப் பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் அசுர வளர்ச்சி: 12 ஆண்டுகால இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி!


