சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பதிலளித்து பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தியே த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி, அரசு எந்தக் கவலையும் அக்கறையும் இல்லாத அளவுக்குத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட மோசமாக, அந்தக் குற்றத்தை எப்படி மூடி மறைப்பது என்பதற்கான வழிகளைத்தான் இன்று அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று, ஒரு குழந்தையின் பிரேதப் பரிசோதனை (ஆட்டோப்சி) நடைபெறும் இடத்திற்கே ஒரு எம்.எல்.ஏ. உள்ளே சென்று, அந்தக் குழந்தையின் பெற்றோருடன் பேரம் பேசும் அளவுக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மகளிரணியைச் சேர்ந்த சகோதரி ஒருவர் அந்த நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட ஒரு மிக மோசமான சூழலில்தான் தமிழ்நாட்டை கொண்டுபோய் அவர்கள் தள்ளியிருக்கிறார்கள்.
சிங்கப்பெண் படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
சிங்கப்பெண் அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? என்ற கேள்விக்கு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ‘சிங்கப்பெண்’ படை என்று பெயர் மாற்றம் செய்து வழங்கியதைப் பற்றி கூட நாங்கள் பெரிதாகப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தொலைபேசி எண் கூடக் கிடையாது.




