பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘சதி’ (Conspiracy) என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதற்கான தீர்ப்பு ஜூலை 3-ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். தனது சேவைபெறுநர், டெய்சி ஃபோரஸ்ட் (Daisy Forrest) என்ற பெண்ணுடன் இணைந்து ‘சதி’ குற்றத்தைப் புரிந்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.


