கடந்த 11ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் 12 மணியளவில் சாமிமலை ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டிருந்த 55 வயதுடைய கிட்ணன் சிவபெருமான் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் காணாமல் போனதை தொடர்ந்து, ஸ்டரஸ்பி தோட்டத்தின் குமரி பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆற்றங்கரையோரம் அவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து ஆரம்பித்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது, கவரவலை தோட்டத்தின் ‘அப்பர் குரூடன்’ (Upper Division) பகுதி வழியாக செல்லும் சாமிமலை ஓடையில் சடலம் ஒன்று ஒதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்களை வரவழைத்துத் தடயங்களைச் சேகரித்தனர். பின்னர், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செ.தி. பெருமாள்


