Last Updated:
கர்நாடக பாகல்கோட் தேவநாவரில் நில இழப்பீடு தாமதமானதால், அரசு ஊழியர் மீது விவசாயி காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு ஊழியரை ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகல்கோட் பகுதியில் உள்ள தேவநாவர் என்ற இடத்தில் 2004-ஆம் ஆண்டில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தாமதமாகவும், மிக குறைவான அளவிலும் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள நகர்ப்புற வளர்ச்சி ஆணைய அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஊழியர் அன்கத் என்பவரை விவசாயி பசவராஜ் தோட்டாமணி என்பவர் காலணியால் தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். பின்னர் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.


