கோத்தா கினபாலு: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 27,640 ஆகப் பதிவான பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், ஜூன் 13 (தொற்றுநோயியல் வாரம் 23) நிலவரப்படி, நாடு தழுவிய டெங்கு பாதிப்புகள் 27% அதிகரித்து 33,367 ஆக உயர்ந்துள்ளன. சபாவில் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக சுகாதார அமைச்சர் ஸூல்கிஃப்ளி அஹ்மட் கூறினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,905 ஆக இருந்த பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், மாநிலத்தில் 50.4% அதிகரித்து 2,866 ஆக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சபாவின் பாதிப்பு எண்ணிக்கைக்கு முக்கியக் காரணமாக கோத்தா கினபாலு, கோத்தா மருது, தவாவ், சண்டக்கான், பெனாம்பாங், புட்டாட்டான் ஆகிய பல மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸூல்கிஃப்ளி கூறினார்.ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் தொற்றுநோய்களின் எதிர்பார்க்கப்படும் சுழற்சிப் போக்கிற்குள் இந்த அதிகரிப்பு அடங்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த நிலைமையைக் கையாள்வதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக, அவர் இங்குள்ள மங்கடால் சமூக மண்டபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆசியான் டெங்கு தினம், உலக மலேரியா தினம் மற்றும் 2026 தேசிய ஆரோக்கியமான மலேசியா செயல்திட்டப் பேரணியையொட்டி நடைபெற்ற மாபெரும் கூட்டுப் பேரணி ஆகியவற்றில் தலைமை தாங்கினார்.
ஸூல்கிஃப்ளி தமதுரையில் சுழற்சிப் போக்கைத் தவிர, பரவிவரும் டெங்கு வைரஸின் துணை வகைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும், தற்போது DEN-3 துணை வகை ஆதிக்கம் செலுத்துவதும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது என்றார். இந்தச் சவாலை எதிர்கொள்ள, அமைச்சகம் ‘டெங்கு இல்லாத சமூகம்’ (கொம்பாட்) திட்டத்தின் மூலம் நடத்தை சார்ந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உத்திசார் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.




