Last Updated:
Tomato Prices| மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது 15 கிலோ தக்காளி பாக்ஸ் ஒன்று ரூ.600 வரை விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடும் வெயில் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உள்ளூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கான முக்கிய காய்கறி வர்த்தக மையமாக விளங்கும் மாட்டுத்தாவணி சந்தைக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. தற்போது உற்பத்தி குறைந்துள்ளதால் தக்காளி வரத்து கணிசமாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மொத்த விற்பனை சந்தையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு அட்டைப்பெட்டி தக்காளி ரூ.450 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தக்காளி விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதன் தாக்கம் சில்லறை சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறிய உணவக உரிமையாளர்களும் கூடுதல் செலவைச் சந்தித்து வருகின்றனர். பருவநிலை சீரடைந்து, பிற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலையில் குறைவு ஏற்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதுவரை தற்போதைய விலை நிலவரம் தொடரும் வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
