சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி நன்றி தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப்பாடகர் சங்கீத்ஷன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கும் சட்ட முயற்சியில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் அவரின் விடுதலைக்கு ஸ்ரீதரன் எம்.பி. யம் ஜனாதிபதியுடன் பேசியிருந்தார். இன்னும் பலரும் சங்கீத்ஷனின் விடுதலாக்க குரல் கொடுத்தனர்
இந்நிலையில் சங்கீத்ஷன் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழரசுக்கட்சியாக நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.

