பெர்சத்து கட்சியின் தெமர்லோ தொகுதி செயற்குழு உறுப்பினர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் அக்கட்சியை விட்டு விலகி, டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் முன்னெடுக்கும் புதிய அரசியல் தளமான ‘கெராகான் ரீசெட் கட்சியில் இணையப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.ஜூன் 11 பெர்சத்து கட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற அவசர தொகுதி செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொகுதித் தலைவர் டத்தோ முகமது ரொபாயி ஹம்டான், தங்களின் இந்த முடிவு ஒரு தனிநபரின் விருப்பம் அல்ல என்றும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை மதித்து எடுக்கப்பட்ட கூட்டு முடிவு என்றும் விளக்கினார்.
ஒட்டுமொத்தமுள்ள 20 செயற்குழு உறுப்பினர்களில், வெறும் மூவர் மற்றும் இரண்டு கிளைகள் மட்டுமே இம்முடிவை ஏற்கவில்லை என்றும், மற்ற அனைவரும் புதிய இயக்கத்திற்கு முழு ஆதரவு தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அளவில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சுமுகமற்ற உறவு, அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே இந்த நகர்வுக்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..
இருப்பினும், இந்த மாற்றம் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பலத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என்று முகமது ரொபாயி உறுதியளித்தார். தாங்கள் பெர்சத்து கட்சியிலிருந்து ஒரு புதிய தளத்திற்கு மாறினாலும், பிஎன் கூட்டணியிலேயே நீடிப்பதாகவும், பாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடனான சுமுகமான கூட்டு அரசியல் பணிகள் பகாங் மாநிலத்தில் வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜூன் 13 அன்று தானா மேராவில் நடைபெறவுள்ள இந்த கட்சி இயக்கத்தின் முதலாவது மாநாட்டிற்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் இன்னும் பல தொகுதிகள் தங்களைப் பின்பற்றி இதேபோன்ற முடிவை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பி.ராமமூரத்தி




