Last Updated:
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தற்போது என்ன செய்கிறார்கள் என என்பதை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கேரளத்தில் போலீஸ் வருவதை அறிந்ததும் கஞ்சாவை குக்கரில் சாதத்துடன் ஒளித்து வைத்து வேகவைத்த இளைஞர், சற்று நேரத்தில் குக்கர் விசிலடித்ததால் வசமாக மாட்டிக் கொண்டார்.
கேரள மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக ‘ஆப்ரேஷன் தூஃபான்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தற்போது என்ன செய்கிறார்கள் என என்பதை போலீசார் கண்காணித்து வந்தனர். போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தற்போது என்ன வேலை செய்து வருகிறார்கள்?. அவர்கள் கேரளத்துக்கு வெளியே பயணம் செய்கிறார்களா?. மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா? என போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில், திருச்சூர் குன்னங்குளம் அருகே உள்ள அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதான பினீஷ் என்பவரை போலீஸார் கண்காணித்து வந்தனர். இவர் மீது பல்வேறு போதைப்பொருள் விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பினீசை கண்காணித்ததில் அவர் கஞ்சா விற்பனையில் மீண்டும் ஈடுபட்டு வருவதாக குன்னங்குளம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் பினீஷின் வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
சமையல் அறையிலிருந்து திடீரென குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் கஞ்சா வாசனை குப்பென்று பரவியிருக்கிறது. என்ன நடக்கிறது என பார்த்த போலீசாருக்கு குக்கரிலிருந்து வெளியேறிய ஆவியிலிருந்து தான் அந்த கஞ்சா வாசனை வருவது தெரியவந்தது. உடனே பீனிஷிடம் குக்கரில் என்ன சமைக்கிறாய் என போலீஸார் கேட்டதற்கு, சாதம் வைத்திருப்பதாக அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியிருக்கிறார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் சமையல் அறைக்குச் சென்று, அடுப்பை அணைத்ததுடன் குக்கரை கீழே இறக்கினர். அப்போது குக்கரில் உள்ள நீராவி முழுவதையும் வெளியேற்றிவிட்டு திறந்து பார்த்தனர். அதில் குக்கர் நிறைய சாதம் வெந்த நிலையில் இருந்தது. பின் அந்த சாதத்தை கிளறிப் பார்த்தபோது தான் உள்ள கவர் ஒன்றில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இனிமேல் உண்மையை மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்த பீனிஸ் நடந்த உண்மையை ஒன்று விடாமல் கூறினார். போலீஸ் வருவது தெரிந்ததும் கஞ்சாவை எங்கு மறைத்து வைப்பது எனத் தெரியாமல் குக்கரில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து கஞ்சா விற்பனை வழக்கில் பினீஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


