Last Updated:
ரச்சனாவின் ஹோம் டூர் வீடியோக்கள் இப்படியொரு வில்லங்கத்தை இழுத்துவிட்டு விவகாரமான சம்பவம் சோசியல் மீடியாவில் உனக்கு இது தேவையா? என்ற சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். பிரபல யூடியூபரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டு வந்தார். வீட்டில் உள்ள நகைகளை மொத்தமாக டேபிளில் பரப்பி… ஹாய் பிரண்ட்ஸ் பார்த்தீர்களா பிரண்ட்ஸ் எனக் கெத்து காட்டுவதாக நினைத்து மொத்த சீக்ரெட்டையும் படம் பிடித்து ஊருக்கே காட்டி வந்தார்.
கட்டு கட்டான சலவை நோட்டுகளை, சாமி அறையில் அடுக்கி வைத்து அம்மணி எடுத்த இந்த ரீல்ஸ் வீடியோ மத்திய பிரதேசம் முழுக்க ட்ரெண்டிங் ஆனது. மேலும் வீட்டின் ஒவ்வொரு அறை அலமாரிகளிலும் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதையும் ரீல்ஸாக பதிவிட்டு வந்தார்.
இவ்வளவு ஓபனாகவா இருப்பது? பார்த்தாலே கண்ணை உறுத்துகிறதே என நகத்தை கடித்த கொள்ளையர்கள் சிலர் ரச்சனா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். 8 அடி உயரமுள்ள சுவரில் ஏரி.. இரும்பு வேலிகளைத் துண்டித்து உள்ளே குதித்த மர்ம நபர்… ஏணியை வைத்து தனது கூட்டாளியையும் உள்ளே இறக்கி உள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து ரச்சனாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நேக்காக தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு கண் விழித்த ரச்சனாவிற்கு கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததை தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
செல்போன் வாயிலாக அருகில் வசிக்கும் உறவினருக்குத் தகவல் தெரிவித்து கதவை திறந்து பின்னர் வெளியே வந்துள்ளார். அப்போதுதான் வீட்டில் நடந்தேறிய கொள்ளை சம்பவம் குறித்து ரச்சனாவிற்கு தெரியவர அதிர்ச்சி அடைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் கொள்ளையர்கள் திருட்டு வேலை தெள்ள தெளிவாக பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து தடயவியல் வல்லுநர்களின் உதவியுடன் கிடைத்த தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ரச்சனாவின் ஹோம் டூர் வீடியோக்கள் இப்படியொரு வில்லங்கத்தை இழுத்துவிட்டு விவகாரமான சம்பவம் சோசியல் மீடியாவில் உனக்கு இது தேவையா? என்ற சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Jun 09, 2026 10:37 PM IST


