அது, தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய திட்டம். தேசிய நெடுஞ்சாலைகள் விஷயத்தில் பிரதமர்கள் நேருவும் மோடியும் எப்படிச் செயல்பட்டார்கள் என்று பார்ப்பதன் மூலம், இருவரின் காலகட்டத்திலும் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்னென்ன என்பதை அறிந்துவிடலாம். இதில் நேருவின் ஆட்சிக் காலம் என்பது, புதிதாக சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் அடித்தளத்தை அமைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி அமைக்கப்பட்ட அந்த அடித்தளத்தை (நெடுஞ்சாலைத் துறையில்) விரிவாக்கம் செய்தது தற்போதைய ஆட்சிதான். இதை சொல்வதன் பின்னணியை, இக்கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
நேருவின் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை என்பது வேகம் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டிலுமே குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்டதாகவே இருந்தது. புள்ளிவிவரங்கள்படி பார்த்தால் 1951 மற்றும் 1961ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா தனது தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் வெறும் 3,987 கிலோமீட்டர்களை மட்டுமே சேர்த்தது.
தேசிய நெடுஞ்சாலை
இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் கீழான கடந்த பத்து ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கண்டுள்ளன. குறிப்பாக திட்டங்களைச் செயல்படுத்துதல், அளவை விரிவுபடுத்துதல் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையேவும் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பானது கிட்டத்தட்ட 60% விரிவடைந்துள்ளது. அதாவது 2014-இல் 91,287 கிலோமீட்டராக இருந்த நெடுஞ்சாலைகள், 2024-இல் 1,46,195 கிலோமீட்டராக வளர்ந்துள்ளன. இது 54,908 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைச் சேர்த்துள்ளது.
இந்த மாற்றம் வெறும் சாலைகளின் நீளத்தைப் பற்றியது மட்டுமல்ல. இந்த நெடுஞ்சாலைகளின் தரம் மற்றும் திறன் ஆகியவையும் கணிசமாக மேம்பட்டுள்ளன. நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட வழிகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது 2014-இல் 18,278 கிலோமீட்டராக இருந்தது, இன்று 45,947 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதிவேக விரைவுச் சாலைகள் வெறும் 93 கிலோமீட்டரிலிருந்து 2,474 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளன.
நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகமும் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளன. அதன்படி கடந்த 2014-15ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலைகள் ஒரு நாளைக்குச் சுமார் 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் கட்டப்பட்டு வந்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த வேகம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்தது. குறிப்பாக 2020-21ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 36.5 கிலோமீட்டர் என்ற சாதனை அளவை அது எட்டியது. அதனைத் தொடர்ந்த பல ஆண்டுகளிலும் சாலை அமைக்கும் வேகம் ஒரு நாளைக்கு 28 கிலோமீட்டருக்கும் அதிகமாகவே நீடித்தது.
குறிப்பாக ‘பாரத்மாலா பரியோஜனா’ போன்ற முதன்மைத் திட்டங்கள், விரைவுச் சாலைகளின் விரிவாக்கம், பொருளாதார வழித்தடங்கள் – எல்லைச் சாலைகள் மற்றும் ‘பி.எம். கதி சக்தி’ திட்டத்தின் கீழான பன்முக இணைப்பு ஆகியவை இந்தியாவின் உள்கட்டமைப்பு அமைப்பையே மாற்றி அமைத்துள்ளன. இதன் விளைவாக வாகன ஓட்டிகளுக்கு பல மணி பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்துச் செலவுகள் குறைந்துள்ளன, விநியோகச் சங்கிலிகள் வலுவடைந்துள்ளன. பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்பும் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை
1951 – 1961-க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில், அதாவது நாடு சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில், பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான (3,987 கி.மீ) தேசிய நெடுஞ்சாலைகளே அமைக்கப்பட்டன. அப்போது வேகமும் மிகவும் குறைவாக இருந்தது. இதற்கு அப்போதிருந்த பொருளாதார சூழல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. இதுவே இப்போது 2014 – 2024க்கு இடைப்பட்ட தற்போதைய பிரதமரின் ஆட்சிக் காலத்தில், பத்தே ஆண்டு காலத்தில் முன்னெப்போதையும் விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாக (54,908 கி.மீ) நெடுஞ்சாலைகள் மிக அதிவேகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் உள்கட்டமைப்பை வெறும் ‘தேவை’ என்று நிலையிலிருந்து, அதை ‘நாட்டின் வளர்ச்சி உத்தி’யாகப் பார்க்கும் நிலைக்கு இந்தியா மாறியுள்ளது.

