லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்டும் தீவிர போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவது பாதிக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்காக இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவையும், அதிபர் ட்ரம்ப் கண்டித்தார். ஆனாலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் தென்பகுதியை ஆக்கிரமித்து முன்னேறி வரும் இஸ்ரேல் ராணுவம், எச்சரிக்கை விடுக்காமல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதற்குப்பின் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஈரானின் 10 ஏவுகணைகளை இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்தது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.
இதனால் இஸ்ரேலின் பல நகரங்களில் சைரன் எழுப்பப்பட்டது. மக்கள் பதுங்கு குழியில் சென்று மறைந்தனர். இஸ்ரேலின் நெவாடிப், டெல் நோஃப் நகரங்களில் உள்ள 2 விமான தளங்களை தாக்கியதாக ஈரான் கூறியது. ஆனால் அங்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற அறிவிப்பு வெளிவரவில்லை. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் குண்டு வீசின.
இதனால் இஸ்பஹான், கரஜ் மற்றும் டேப்ரிஸ் நகரங்களில் பயங்கர சத்தம் கேட்டது. ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ ரசாயன ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதனால் இருதரப்பும் மீண்டும் கடும் போரில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த போர்ச் சூழல் அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் முயற்சியை பாதித்துள்ளது. இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். (a)


