கள்ளக்காதலுக்காகப் பெற்ற மகளையே தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம், மூன்று மாதங்களுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், தாவணகெரேவைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணமாகியது. இவர்களுக்கு 17 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். சுமுகமாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கள்ளக்காதல் என்ற நச்சுப் பாம்பு நுழைந்தது.
பிரியங்காவிற்கு அவரது கல்லூரித் தோழனான மோகன் என்பவனுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தீவிர கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாகக் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரியங்கா விவாகரத்து கோரியுள்ளார். பின்னர், தனது 5 வயது இளைய மகள் வெண்ணிலாவை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பெங்களூருவில் கள்ளக்காதலன் மோகனுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி சிறுமி வெண்ணிலா திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தாள். மகளின் மரணம் குறித்துக் கேட்டபோது, தாய் பிரியங்கா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். ஒருமுறை, “மகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொடுத்தேன்,” என்று கூறியவர், மறுமுறை, “ஐஸ்கிரீம் கொடுத்துவிட்டு, ஏசி (AC) காரில் தூங்க வைத்தேன்,” என்று மாற்றி மாற்றிக் கூறியுள்ளார். அவரின் இந்த மர்மமான பேச்சுகள் குடும்பத்தினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.
பெற்ற மகள் வெண்ணிலாவின் மரணத்தில் பெரும் சந்தேகம் அடைந்த தந்தை பிரவீன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை (Autopsy Report), வெளிநாட்டில் வசிக்கும் தனது மருத்துவர் உறவினருக்கு அனுப்பி ஆலோசித்துள்ளார். அந்த அறிக்கையை ஆய்வு செய்தபோதுதான் அந்தப் பகீர் உண்மை வெளிவந்தது! சிறுமி வெண்ணிலா இயற்கையாக இறக்கவில்லை என்பதும், அவள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளாள் என்பதும் அந்த மருத்துவ அறிக்கையின் மூலம் அம்பலமானது.
மகள் இறந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், திரட்டப்பட்ட பிரேதப் பரிசோதனை ஆதாரங்களுடன் தந்தை பிரவீன் பொலிஸ் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், வழக்குப் பதிவு செய்து கள்ளக்காதலன் மோகனைக் கைது செய்தனர். மேலும், காம வெறியால் பெற்ற மகளையே பலிகொடுத்துவிட்டுத் தற்பொழுது தலைமறைவாக உள்ள கொடூரத் தாய் பிரியங்காவைப் பொலிஸார் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


