அமெரிக்கா – ஈரான் இடையேயான ராணுவ மோதல்கள்:
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் அண்மைக்காலமாக மிகத் தீவிரமடைந்திருந்தன. ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயத்தைத் தவிர்த்து, பிராந்தியத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவர டிரம்ப் இந்த Diplomatic வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. டொனால்ட் டிரம்ப் எப்போதும் தன்னை ஒரு சிறந்த Deal Maker ஆகக் காட்டிக்கொள்ளவே விரும்புவார். கடந்த காலங்களில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் யாரும் எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துப் பேசியதைப் போல, ஈரானுடனும் ஒரு நேரடி பேச்சுவார்த்தை மூலம் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையோ அல்லது பாதுகாப்பு உடன்படிக்கையையோ ஏற்படுத்த டிரம்ப் திட்டமிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போதுள்ள போர் பதற்றம் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், டிரம்பின் அரசியல் செல்வாக்கையும் பாதிக்கக்கூடும் என்பதால், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைக் குறைக்க அவர் முயல்கிறார். அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் தனது தந்தை ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட போதிலும், புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் Professional-ஆக நடந்துகொள்வார் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மொஜ்தபா கமேனிக்கு சில வட்டாரங்களில் நல்ல மதிப்பு இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அன்று கேலி… இன்று மதிப்பு! டிரம்ப் மனமாற்றத்துக்கு காரணம் என்ன?
கடந்த மார்ச் மாதம் வரை மொஜ்தபா கமேனியை Lightweight என்று டிரம்ப் கேலி செய்து வந்தார். ஆனால், தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே திரைமறைவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான Diplomatic நகர்வுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், மொஜ்தபா கமேனி அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிப்ரவரி மாத அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாக ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து கடந்த வாரம் ஒரு Podcast நேர்காணலில் பேசிய டிரம்ப், தனது வழக்கமான நையாண்டி பாணியில்,
கமேனியின் உடலில் பல பாகங்கள் missing எனக் கூறுவதாக கிண்டல் செய்திருந்தார். ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதையும், அவர் ரகசிய இடத்திலிருந்து ‘எழுத்துப்பூர்வமாக’ அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைக் கவனித்து வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால்தான் டிரம்ப் உடனடியாக தனது தொனியை மாற்றி, அவரை “புரொபஷனல்” என்று பாராட்டியுள்ளார்.
டிரம்பிற்கு ஒரு திட்டம் இருந்தது. ஆனால், டிரம்ப் அதை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தனக்கு ஒரு Jimmy Carter moment அமைந்துவிடக் கூடாது என்பதுதான். 1980-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், ஈரானில் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்க ‘ஆபரேஷன் ஈகிள் கிளா’ (Operation Eagle Claw) என்ற ராணுவ நடவடிக்கையை எடுத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதனால் கார்ட்டர் தனது அதிபர் பதவியை இழந்தார். அந்தப் பயம் டிரம்பிற்கும் இருந்தது இப்போது தெரியவந்துள்ளது.
டிரம்பை நிராகரிக்கும் ஈரான் உச்ச அதிபர்?
“மொஜ்தபாவை மதிக்கிறேன்” என்று கூறினாலும், செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தனது வழக்கமான தற்பெருமையைக் கைவிடவில்லை. “ஈரானுடன் ஒப்பந்தம் இல்லாமலேயே எங்களால் அங்கிருக்கும் அணுப் பொருட்களை இப்போதே கைப்பற்ற முடியும். எங்களைத் தடுக்க அவர்களால் முடியாது. ஆனால், இப்போதைக்கு அதற்கு அவசியமில்லை, நாங்கள் அதை கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்” என்றும் சவால் விடுத்துள்ளார். டிரம்ப் இவ்வளவு இறங்கி வந்து பேசினாலும், ஈரான் தரப்பு டிரம்பின் இந்த சந்திப்பு அழைப்பை இப்போதைக்கு நிராகரித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் பிரச்சனை
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்காமல், அமெரிக்காவுடன் எந்தவொரு உயர்மட்டப் பேச்சுவார்த்தையும் சாத்தியமில்லை என்பதில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி உறுதியாக இருந்து வருகிறார். டிரம்ப் தங்களை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாமல், உலகளவில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கவே தங்களை நோக்கி ஓடி வருகிறார் என்று ஈரான் அரசு தங்களுக்குள் “வெற்றி விழா” கொண்டாடி வருவதுதான் தற்போதைய உச்சகட்ட சுவாரசியம்.

