இங்கே தான் சிக்க்ல் உருவாகிறது. எஸ்பிஐ வங்கி தன் கம்ப்யூட்டரில் ஒரு பட்டனைத் தட்டி, “நான் ராம் கணக்கில் இருந்து 10 லட்சத்தைக் குறைத்துவிட்டேன், நீ சோமு கணக்கில் 10 லட்சத்தைக் கூட்டிக்கொள்” என்று சொன்னவுடன், இந்தியன் வங்கி தன் கணினியில் சும்மா எண்களை மட்டும் மாற்றி, சோமுவுக்குப் பணத்தைக் கொடுத்துவிடாது. சோமுவுக்குப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால், எஸ்பிஐ வங்கியிடமிருந்து அந்த ₹10 லட்சத்தை இந்தியன் வங்கி ‘உண்மையாகவே’ வசூலிக்க வேண்டும். வங்கிகள் பொதுமக்களைப் போல நேரடியாக ரொக்கப் பணத்தைக் பரிமாறிக் கொள்ளாது. அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியில் தங்களுக்கென ஒரு கணக்கு வைத்திருக்கும். எஸ்பிஐ வங்கி தன்னுடைய ஆர்பிஐ கணக்கில் உள்ள 10 லட்சத்தை (ரொக்க இருப்பை), இந்தியன் வங்கியின் ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றிக் கொடுக்கும். அதைப் பெற்றுக் கொண்ட பிறகே, இந்தியன் வங்கி சோமுவின் கணக்கில் 10 லட்சத்தை வைப்புத் தொகையாக (Deposits) வரவு வைக்கும்.


