உலகக் கிண்ண போட்டிகளில் கலந்துகொள்ளும் இரசிகர்களுக்கான தங்களது கொள்கையில் பிபா (FIFA) கடைசி நிமிடத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, இனி இரசிகர்கள் மீண்டும் நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை (refillable plastic bottles) மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
வட அமெரிக்காவின் கோடைகால வெப்பத்தில் ரசிகர்களின் நலன் என்னவாகும் என்ற கவலைகளுக்கு மத்தியில், இந்த கடைசி நிமிட நடவடிக்கை இரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ‘பிரீ லயன்ஸ்’ (Free Lions) இங்கிலாந்து இரசிகர்கள் தூதரகம் கூறுகையில்,
“அடுத்து என்ன? சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சன் க்ரீமிற்கும் (Sun cream) தடை விதிக்கப்பட்டு, அதை மைதானத்திற்குள் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
“வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் காயங்களையும் தடுப்பதற்காகவே” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிஃபா தெரிவித்துள்ளது.
முன்னதாக, டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கான நடத்தை விதிகளின்படி, ஒரு லீட்டர் கொள்ளளவு கொண்ட காலியான, வெளிப்படையான, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டிலைக் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய இற்றைப்படுத்தலில் (update) மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களுக்கு இனி அனுமதி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்:
“அனைத்து வீரர்கள், நடுவர்கள், இரசிகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் பிபா உறுதியுடன் உள்ளது.”
“வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் காயங்களையும் தடுக்கும் பொருட்டே பாட்டில்களை தடை செய்ய பிபா முடிவு செய்துள்ளது.”
“பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மைதானங்களில் பலவற்றில் ஏற்கனவே வெளிப்புற பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிபா இந்த பாதுகாப்பு விதியை தனது ஒட்டுமொத்த போட்டி மைதானங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது” என்று கூறினார்.
இந்தத் தொடரின் போது சில மைதானங்களில் வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கடைசி நிமிட நடவடிக்கை ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. R

