இராகவன் கருப்பையா- சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு தமிழின இளைஞர் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் களம்காணவிருக்கிறார்.
எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கும் இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் நிஷான் வேலுப்பிள்ளை எனும் அந்த 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்து விளையாடவிருக்கிறார்.
கால்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் உலகின் தலைச்சிறந்த 48 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,200 விளையாட்டாளர்கள் இந்தப் போட்டிகளில் களம்காணவிருக்கின்றனர்.
முதல் முறையாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ, ஆகிய 3 நாடுகள் கூட்டாக ஏற்று நடத்தும் இந்தப் போட்டிகளின் தொடக்க ஆட்டம் மெக்ஸிக்கோ நகர அரங்கில் அந்நாட்டுக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரான நிஷான், 2001ஆம் ஆண்டில் மெல்பர்ன் நகரில் பிறந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் ஆஸ்திரேலிய தேசிய குழுவுக்கு விளையாடி வருகிறார்.
இவருடைய தந்தை சசினாத் வேலுப்பிள்ளை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மலேசியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டனர்.
சர்வதேச நிலையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை விட அதிகமான ரசிகர்களை ஈர்க்கும் இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இம்முறை மொத்தம் 16 நகரங்களில் அரங்கேறவுள்ளன.
ஆகக் கடைசியாக தமிழின இளைஞர் ஒருவர் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்றது கடந்த 2006ஆம் ஆண்டாகும்.
ஜெர்மனியில் நடைபெற்ற அந்த போட்டிகளில் விகாஷ் தொராசு எனும் கால்பந்து வீரர் ஃபிரான்ஸ் நாட்டை பிரதிநிதித்து களமிறங்கினார்.
ஃபிரான்ஸில் பிறந்து வளர்ந்த அந்த மத்தியத்திடல் ஆட்டக்காரர், ஏ.சி.மிலான் போன்ற புகழ்பெற்ற கிளப்புகளுக்கும் நீண்ட நாள்களாக விளையாடியுள்ளார்.
அவருடைய பெற்றோர் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நிஷான் வேலுப்பிள்ளையின் உலகக் கிண்ண பிரவேசம் இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி இங்குள்ள நம் சமூகத்தைச் சார்ந்த கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிக அளவில் தூண்டியுள்ளதைக் காண முடிகிறது.
ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தை துர்க்கி நாட்டுக்கு எதிராக எதிர்வரும் ஜூன் 14ஆம் தேதி கனடாவின் வென்கூவர் நகரில் விளையாடவிருக்கிறது.

