Last Updated:
கடந்த வாரம் வரை ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.25 முதல் ரூ.27 வரை விற்பனையாகி வந்தது. இதனால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.
விராட்டிக்குப்பம், அத்தியூர் திருவாதி, பிடாகம் உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விளைந்த வெண்டைக்காய் தேக்கம். பறிப்புக் கூலிக்குக் கூட வருமானம் இல்லாமல் விவசாயிகள் கவலை.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக விராட்டிக்குப்பம், அத்தியூர் திருவாதி, பிடாகம், அரசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டு முழுவதும் பயிரிடக்கூடியதுடன், மற்ற காய்கறிப் பயிர்களை விட அதிக லாபம் தரக்கூடிய பயிராக கருதப்படுவதால் பலரும் வெண்டைக்காயை முக்கியப் பயிராக தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவும் சந்தை விலை வீழ்ச்சி, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெண்டைக்காய் சாகுபடியில் பாசன நீர் மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தில் நீர் தேங்காமல் கட்டுப்பாட்டுடன் பராமரிக்க வேண்டும். அதிகளவில் நீர் தேங்கினால் செடிகள் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சவால்களை சமாளித்து, இந்த பருவத்தில் விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அமோக விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சந்தையில் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.25 முதல் ரூ.27 வரை விற்பனையாகி வந்தது. இதனால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் சந்தைக்கு வெண்டைக்காய் வரத்து திடீரென அதிகரித்ததால் விலை தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. தற்போது பொதுச் சந்தைகளில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
பொதுச் சந்தைகளில் விலை குறைந்துள்ள நிலையில், கிராமங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வெண்டைக்காயை கொள்முதல் செய்து வருகின்றனர். ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2.50 முதல் ரூ.3.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சில இடங்களில் ரூ.5 வரை விலை வழங்கப்பட்டாலும், அது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் 30 முதல் 35 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை வெண்டைக்காய் ரூ.300க்கு மட்டுமே விற்பனையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “மற்ற காய்கறிகளை விட வெண்டைக்காய் சாகுபடி நல்ல வருமானம் தரும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி ஏக்கர் கணக்கில் பயிரிட்டோம். இந்த முறை விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது. ஆனால் விலை முற்றிலும் சரிந்துவிட்டது.
வெண்டைக்காய் பறிப்பதற்கான கூலி, மூட்டை கட்டும் செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுகளைக் கூட தற்போதைய விலையில் ஈடுகட்ட முடியவில்லை. கிலோ ரூ.2.50 முதல் ரூ.5 வரை விற்றால் முதலீட்டைக் கூட திரும்பப் பெற முடியாது. ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். தற்போது அந்த முதலீட்டையே மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்ற கவலையில் உள்ளோம்” என்றனர்.
அமோக விளைச்சல் கிடைத்தும், உழைப்புக்கேற்ற விலை கிடைக்காததால் விழுப்புரம் மாவட்ட வெண்டைக்காய் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். எனவே அரசு தலையிட்டு உரிய ஆதரவு விலையை நிர்ணயிப்பதுடன், விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

