இன்று காலை ஜாலான் செராஸில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலின் போது, தனது பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற எட்டு வயது சிறுமி, எஸ்யூவி (SUV) காரின் பின்புறம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை தலைவர் ஜம்ஜூரி ஈசா கூறுகையில், தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற 35 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்து வலது புற பாதையில் இருந்த எஸ்யூவி காரின் பின்புறம் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இந்த விபத்தைத் தவிர்க்க முடியாமல் அவர்கள் மீது மோதி கீழே விழுந்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தந்தை இடுப்பு மற்றும் இரு கால்களிலும் காயமடைந்தார், அவரது மனைவி தனது வலது கையில் காயம் அடைந்துள்ளார் என்று ஜம்ஜூரி கூறினார். இருவரும் கான்செலர் துங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எஸ்யூவி காரின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை, அதே நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் 47 வயது ஓட்டுநர் தனது இடது முழங்காலில் காயம் அடைந்தார்.
இப்பரபரப்பான விபத்து குறித்து, அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜம்ஜூரி தெரிவித்தார்.
-fmt
