ஈவு இரக்கமின்றி பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த மனித மிருகம். கணவரை பிரிந்து வாழும் இளம்பெண்ணுக்கு டவ் டார்ச்சர் கொடுத்து, அவரின் குழந்தைக்கு எமனாக மாறியவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரைச் சேர்ந்தவர் 24 வயதான ரதி தேவி. ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களுக்கு பின்பு பிரிந்துள்ளார்.
இதையடுத்து, தனது ஒன்றரை வயது மகனுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும், கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதற்கு விராஜ் என்கிற ஜிதேந்திரா என்ற இளைஞர் உதவி செய்துள்ளார். பெண்ணுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்க வந்தவர், ஒரு கட்டத்தில் அவரே அந்த பெண்ணை மறுமணம் செய்ய துடித்துள்ளார்.
இது தொடர்பாக தனது விருப்பத்தை ரதி தேவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணமாகி தான் பட்ட கஷ்டம் போதும் என்ற மன நிலையில் தான் விவாகரத்து கேட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே, தற்போதைக்கு வேறு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் ஜிதேந்திரா தொடர்ந்து தன்னை காதலிக்க கூறி டார்ச்சர் செய்துள்ளார். திருமணத்துக்கு அழுத்தம் கொடுத்த போதும் ரதி தேவி தனது முடிவில் தெளிவாக இருந்துள்ளார்.
இதனால் இளம்பெண் மீது கடும் ஆத்திரம் கொண்டவர், வன்மத்தை கக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் ஒன்றரை வயது மகனுக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி ஜிதேந்திரா வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்திற்கு சென்றதும் திடீரென குழந்தையை தரையில் ஓங்கி அடித்து தாக்கியுள்ளார். அரக்கத்தனமாக மாறிய இளைஞர் ஈவு இரக்கமின்றி குழந்தையை 8 முறை ஆக்ரோஷமாக தரையில் அடித்துள்ளார்.
முதல் அடியிலேயே சுயநினைவை இழந்த குழந்தை அசைவற்று கிடந்துள்ளது. குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த குழந்தையை எடுத்துச் சென்று வீட்டின் அருகே போட்டுவிட்டு ஜிதேந்திரா தப்பியோடியுள்ளார். குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்ததை கண்டு குடும்பத்தினர் பதறி துடித்துள்ளனர்.
உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
பின்னர், வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தையை தூக்கிக் சென்ற ஜிதேந்திரா கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்ததும் ஜிதேந்திரா தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜிதேந்திராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவரை பிரிந்து வாழும் பெண், தனது காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் அவரின் ஒன்றரை வயது மகனை இளைஞர் ஒருவர் தரையில் தூக்கி அடித்து கொடூரமாக கொலை செய்தது உத்தர பிரதேசத்தை உலுக்கியுள்ளது.

