Last Updated:
அமைச்சரவையில் புதிய உத்வேகத்தைக் கொண்டுவர அதிக அளவில் இளைஞர்களுக்கும், பெண் தலைவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 21 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த ஊகங்கள் வலுவாக எழுந்துள்ளன. ஜூன் இரண்டாவது வாரத்தில் அல்லது ஜூன் 15-ஆம் தேதிக்குப் பிறகு இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு அதிகாரப்பூர்வமாக நடைபெறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னணியில் பாஜகா தலைமை பல முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான இலக்குகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சகங்களின் செயல்திறன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமையவுள்ளன. சரியாகச் செயல்படாத அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம். அமைச்சரவையில் புதிய உத்வேகத்தைக் கொண்டுவர அதிக அளவில் இளைஞர்களுக்கும், பெண் தலைவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
ஆந்திராவின் தெலுங்கு தேசம் (TDP) மற்றும் பீகாரின் ஜனதா தளம் (JDU) போன்ற முக்கியக் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த இந்த அமைச்சரவை மாற்றம் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆந்திர மாநிலக் கூட்டணியில் முக்கியப் பங்காற்றிய புரந்தேஸ்வரிக்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய முக்கியப் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தெலங்கானா மாநில பாஜக தலைவர்களுக்கும், குறிப்பாக பண்டி சஞ்சய் போன்றவர்களுக்கும் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நிதி போன்ற மிக முக்கியமான துறைகளின் அமைச்சர்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.
மூத்த அமைச்சர்கள் சிலர் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சி பொறுப்புகளில் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த அமைச்சரவை மாற்றம் என்பது வரவிருக்கும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டும், 2029 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகா-வின் அடித்தளத்தைத் தயார் செய்யும் நோக்கிலும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இருப்பினும், இவை அனைத்தும் தற்போது வரை அரசியல் வட்டாரங்களின் கணிப்புகளாகவே உள்ளன. பிரதமர் அலுவலகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனில் மத்திய அமைச்சரவை மாற்றம்? சீனியர்களுக்கு கட்சிப் பதவி.. இளைஞர்கள், பெண்களுக்கு அமைச்சர் பொறுப்பு?


