டி. கே. ஜி. கபில (28.05.2026)சுமார் இரண்டு கோடியே ஏழு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் (ரூ. 20,730,000) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 14 வெளிநாட்டு பயணிகள், வியாழக்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீன நாட்டவர்கள் ‘பசுமை வழி’ ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியில் கொண்டு செல்ல முயன்றபோதே பிடிபட்டுள்ளனர்.
இவர்கள் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ‘பட்டிக் எயார்’ (Batik Air) நிறுவனத்திற்கு சொந்தமான OD-297 என்ற விமானம் மூலமே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 14 பயணப்பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவற்றுள் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பான 138,200 சிகரெட்டுகள் அடங்கிய 691 சிகரெட் கார்ட்டூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


