இடஒதுக்கீடு, அனைவரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய உணர்வு எனப் பல்வேறு சமூக-பொருளாதாரக் குறியீடுகளில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், அரசியல் திசையைப் பொறுத்தவரை கர்நாடகாவிற்கும் நமது மாநிலத்திற்கும் பெரும் வேறுபாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, கடந்த 79 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட முறை முதலமைச்சர்கள் மாறியுள்ளனர். ஆனால், மூன்று முதலமைச்சர்கள் மட்டுமே தங்களது 5 ஆண்டுகால முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்துள்ளனர்.
எஸ். நிஜலிங்கப்பா (காங்கிரஸ், 1962-1968), டி. தேவராஜ் அர்ஸ் (காங்கிரஸ், 1972-1977) மற்றும் சித்தராமையா (காங்கிரஸ், 2013-2018) ஆகிய மூவர் மட்டுமே கர்நாடக வரலாற்றில் அந்தப் பெருமையைப் பெற்றவர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. 1967-க்குப் பிந்தைய தமிழக அரசியலில் தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளின் கூட்டணியைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழல் உள்ளது. சமீபத்தில், இம்மாநிலக் கட்சி அரசியலில் ஒரு சிறிய உடைவை ஏற்படுத்தி மற்றொரு மாநிலக் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ளது.
ஆனால், கர்நாடகாவிலோ தொடக்கம் முதலே தேசியக் கட்சிகளே கோலோச்சி வருகின்றன. கர்நாடக அரசியலின் மையச்சக்தியாக நிலவுடைமைச் சமூகங்களான ‘லிங்காயத்துகள்’ மற்றும் ‘வொக்கலிகாக்கள்’ உள்ளனர். இவர்கள் மாநில மக்கள் தொகையில் சுமார் 26% (லிங்காயத்துகள் 15.3%, வொக்கலிகாக்கள் 10.8%) மட்டுமே இருந்தாலும், சட்டமன்றத்தில் சராசரியாக 60%-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி வருகின்றனர்.
1952 முதல் 1978 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் (1967 தேர்தல் தவிர்த்து), காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. இந்த காலகட்டங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இக்காலகட்டத்தில்தான், ஒருங்கிணைந்த மைசூர் மாநிலத்தின் முதலமைச்சராக எஸ். நிஜலிங்கப்பா (1962-1968) தனது முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்து, நவீன கர்நாடகாவின் சிற்பியாகத் திகழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து 1970-களில் முதலமைச்சராக இருந்த டி. தேவராஜ் அர்ஸ், இந்த ஆதிக்க சாதிகளின் பிடியை உடைக்க முற்பட்டார். அதற்காக, மாநில மக்கள் தொகையில் 32.5% ஆக இருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தார். இவரே வரலாற்றுச் சிறப்புமிக்க பின்தங்கிய வகுப்பினருக்கான முதலாவது ஆணையத்தை (ஹாவனூர் ஆணையம்) அமைத்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரமளித்தார். இதன் விளைவாக, அமைச்சரவையிலும் சட்டமன்றத்திலும் நிலவுடமை சமூகங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தது. 1972 முதல் 1977 வரை வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த இவர், மாநிலத்திற்கு ‘கர்நாடகா’ எனப் பெயர் சூட்டிய பெருமைக்குரியவர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியின் ஏகபோக செல்வாக்கு 1983-இல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு, ஜனதா கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சி நடத்தியது. பின்னர், 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும், 1989-ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, 223 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1989-ல், காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தது. இருப்பினும், 5 ஆண்டுகள் முழுமையான பெரும்பான்மை இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான உட்கட்சிப் பூசல்களால் ஐந்து ஆண்டுகளில் மூன்று முதலமைச்சர்கள் மாற்றப்பட்டனர். வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் இக்காலகட்டத்தில் அடுத்தடுத்து முதலமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.
பின்னர் 1994-ல் நடைபெற்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஹெச்.டி. தேவகவுடா முதலமைச்சராகப் பதவி வகித்தார். அவர் நாட்டின் பிரதமராக (தேசிய அரசியலுக்கு) சென்ற பிறகு, ஜே.ஹெச். பட்டேல் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் 133 நாட்கள் பதவியில் இருந்தார். 1999-ல் நடந்த தேர்தலில் வாக்காளர்கள் மீண்டும் காங்கிரஸிற்குப் பெரும்பான்மை வழங்கினர். இக்காலகட்டத்தில் எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 4 ஆண்டுகள் மற்றும் 230 நாட்கள் என்ற ஒப்பீட்டளவில் ஒரு நிலையான ஆட்சியை வழங்கினார்.
1988 முதல் 2004 வரையிலான காலகட்டங்களில் மொத்தம் 10 வெவ்வேறு முதலமைச்சர் பதவிக்காலங்களும், 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியும் கர்நாடகத்தில் அரங்கேறின. இத்தனைக்கும், 1989, 1994, 1999 தேர்தல்களில் வாக்காளர்கள் ஏதேனும் ஒரு கட்சிக்குத் தெளிவான அறுதிப் பெரும்பான்மையையே வழங்கியிருந்தனர். இருப்பினும், உட்கட்சி பூசல், தேசியக் கட்சிகளின் ‘ஹை கமாண்ட்’ கலாச்சாரம், லிங்காயத் – வொக்கலிகா சமூகங்களின் அதிகாரப் போட்டி உள்ளிட்ட காரணங்களினால் முதலமைச்சர்களால் தங்களது பதவிக்காலத்தை நீடிக்க முடியாமல் போனது.
2004-க்கு பிறகுதான் அரசியல் கூட்டணிகள் காரணமாகக் கர்நாடகாவில் நிச்சயமற்ற/நிலையற்ற தன்மை உருவானது. 2004-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் தரம் சிங் 1 ஆண்டு 251 நாட்களும், அவரைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JD-S) ஹெச்.டி. குமாரசாமி 1 ஆண்டு 247 நாட்களும் கூட்டணிகளின் அடிப்படையில் முதலமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.
இக்கூட்டணிக் குழப்பங்களால் அக்டோபர் 2007-ல் 35 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் பாஜக-வின் பி.எஸ். எடியூரப்பா வெறும் 7 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். அரசு கவிழ்ந்ததால், மீண்டும் 2007 நவம்பர் முதல் 2008 மே மாதம் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. 2008-2013 வரையிலான 13-வது சட்டமன்றத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோதிலும், அங்கும் உட்கட்சிப் பூசலால் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என மூன்று முதலமைச்சர்கள் மாறினர்.
கடந்த 2013-2018 வரையிலான 14-வது சட்டமன்றத்தில் தான் கர்நாடகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நிலையான ஆட்சியைக் கண்டது. 2013-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, 5 ஆண்டுகள் முழுமையாகப் பதவிக்காலத்தை முடித்து, 35 ஆண்டுகளுக்குப் பின் இச்சாதனையை நிகழ்த்திய மூன்றாவது முதலமைச்சரானார்.
ஆனால், 2018-ல் அமைந்த 15-வது சட்டமன்றம் மீண்டும் பழைய குழப்பத்திற்கே திரும்பியது. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவின் பி.எஸ். எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்று வெறும் 6 நாட்களில் பதவியிழந்தார். பின்பு, காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்றார். 14 மாதங்களில் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மீண்டும் பி.எஸ். எடியூரப்பா 2019-ல் முதலமைச்சரானார். அவர் 2 ஆண்டுகள் 2 நாட்கள் பதவி வகித்த நிலையில், பாஜக ‘ஹை கமாண்ட்’ உத்தரவின் காரணமாக மாற்றப்பட்டு பசவராஜ் பொம்மை முதலமைச்சரானார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போது, சித்தராமையா இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, முதலமைச்சர் பதவியைச் சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் சமமாகப் பிரித்துக் கொள்வது என டெல்லி மேலிடத்தின் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அதன் தொடர்ச்சியாகவே, சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கர்நாடக வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகப் பணியாற்றி, மிக அதிக காலம் இப்பதவியை வகித்த பெருமையோடு அவர் விடைபெறுகிறார். எனினும், ஒரு முதலமைச்சர் கூடத் தொடர்ந்து இருமுறை 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ய முடியாத மாநிலம் என்ற வரலாற்றுப் பிம்பத்தைக் கர்நாடகா இப்போதும் மாற்றவில்லை.

