Last Updated:
சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது.
நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதில், சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மிகவும் குளிரான சில பள்ளங்களில், மேற்பரப்பிற்குக் கீழே பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பிற்குக் கீழே ஆராயும் திறன் கொண்ட ஒரு அதிநவீன இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள பெரிய ஃபாஸ்டினி பள்ளத்திற்குள் அமைந்துள்ள 1 புள்ளி 1 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பள்ளத்தில், மேற்பரப்பிற்குக் கீழே பனிக்கட்டி இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சந்திரயான்-2 தரவுகளின் அடிப்படையிலான முந்தைய ஆய்வுகள், நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான தடயங்களை ஏற்கனவே கண்டறிந்திருந்தது கவனிக்கத்தக்கது.


