இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்
இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியில் செவ்வாய்க்கிழமை (26) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வட்டி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் சந்தையிலுள்ள கடன் தேவையை (Credit Demand) குறைத்து, பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கமாகும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் (Monetary Policy Board) நேற்று முன்தினம் (25) நடைபெற்ற கூட்டத்திலேயே, இந்தக் கொள்கை வட்டி வீதத்தை அதிகரிக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மாறிவரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்காலக் கணிப்புகள் ஆகியவற்றைக் கவனமாக ஆராய்ந்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தைத் தொடர்ந்து, வங்கி வட்டி வீதங்கள் உட்பட ஏனைய சந்தை வட்டி வீதங்களும் இனிவரும் நாட்களில் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


