மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் உள்ள விடுதி அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் கரும்புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.
சந்தனி நிமாஷா (வயது 05) மற்றும் கசுன் மதுசங்க (வயது 03) என்ற இரண்டு குழந்தைகளே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த குழந்தைகளின் தாய், புற்றுநோய் காரணமாக காத்தான்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மயங்கிக் கிடந்த குழந்தைகள்
பதுளையைச் சேர்ந்த அந்த இரண்டு குழந்தைகளும், தங்கள் தந்தையுடன் தாயைப் பார்க்க வந்தபோது, தற்காலிகமாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் தந்தை, இரண்டு குழந்தைகளையும் அறையில் விட்டுவிட்டு, கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அதனைதொடர்ந்து, தந்தை மீண்டும் விடுதிக்கு திரும்பிய நிலையில், அறையில் தீப்பிடித்திருந்தது கவனிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குழந்தைகளும் அறையிலேயே மயங்கி விழுந்திருந்ததும் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பின்னர், தந்தையால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மட்டக்களப்பு காவல்துறை மற்றும் குற்ற நிகழ்வு புலனாய்வுக் குழுவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |

