Last Updated:
நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண்பதையே அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதற்கு, சர்வதேச விதிகளுக்கு புறம்பாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் நாடு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்வதே முதன்மைக் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர், சிஎன்என்-நியூஸ்18 ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ” மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க ஜலசந்தி நீர்வழித்தடத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தில் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அவர், ” சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறி, ஹார்முஸ் நீர்வழித்தடத்தை ஈரான் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். கப்பல் போக்குவரத்து வரியைச் செலுத்தாத மற்றும் தங்களது உத்தரவுகளுக்குப் பணியாத வர்த்தகக் கப்பல்களைக் கடலில் மூழ்கடித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகிறது. இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். எந்தவொரு சர்வதேச சட்டத்தின் கீழும் இதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும், உலகளாவிய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் அமெரிக்க சார்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை பலனளிக்க வில்லை என்று தெரிவித்த அவர், ஈரான் என்பது தீவிர கருத்து நிலைகள் கொண்ட மதகுருமார்களால் வழிநடத்தப்படும் ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண்பதையே அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார். ஈரானிடமிருந்து வரும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார் என்றும் ரூபியோ எச்சரித்தார்.
ஈரான் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ரூபியோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறினார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அரசியல் நிலவரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் மனிதவள ஆற்றலையும், வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறைத் திறனையும் வெகுவாகப் பாராட்டிய அவர், ” அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து இங்கேயே உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளப் பெருமளவில் ஆர்வமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், உலக நாடுகள் தங்களது பாதுகாப்புத் தளவாடங்களை மேம்படுத்தி வரும் இந்த வேளையில், சர்வதேச கூட்டுப் பாதுகாப்புத் தயாரிப்பில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

