சமீபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சரும் சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளருமான திலும் அமுனுகமவுக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
தற்போது நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்கு ஒன்றோடு தொடர்புடைய சிறுமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திலும் அமுனுகம கருத்து வெளியிட்டதாகக் கூறி கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அட்டமஸ்தானாதிபதி தேரர் ஒருவரின் கைது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவானது ஒரு விபச்சாரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக திலும் அமுனுகம அந்த ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
கடுமையான எதிர்ப்பு
15 வயது சிறுமி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு குறித்து இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து விளக்கமளித்த திலும் அமுனுகம, தனது கருத்துக்கள் அந்தச் சிறுமியை நோக்கியவை அல்ல என்றும், சமூக ஊடகங்களில் தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அறிக்கை நிட்டம்புவ பகுதியில் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவம் குறித்து தமக்குக் கிடைத்த தகவலைப் பற்றியதே தவிர, தற்போது பேசப்படும் சிறுமியைப் பற்றியது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு தவறான புரிதல் காரணமாக இந்த அறிக்கை அந்தச் சிறுமிக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ அல்லது சமூகத்தில் யாருக்கேனும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், அதற்காகத் தான் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறுமிக்கு பாதிப்பு
இதேவேளை, திலும் அமுனுகமவின் இந்த கருத்துக்கள், நீதிமன்ற விசாரணைகளில் பாதிக்கப்பட்டவராகவும் சாட்சியாகவும் இருக்கும் அந்தச் சிறுமிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்து, இது குறித்து விசாரிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு காவல்துறை மா அதிபரிடம் (IGP) உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கை 2023 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை உதவி செய்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக அமையலாம் என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இது தொடர்பான காணொளிகளை தொடர்ந்து பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

