பிரபல பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இணைய உலகில் நேரத்தைச் செலவிடுவதை விட, நிஜ வாழ்க்கையின் தருணங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “சமீபகாலமாக நான் என்னையே கொஞ்சம் மிஸ் செய்கிறேன். சமூக வலைதளங்கள் இப்போது எனக்கு ஒரு பாரமாகத் தோன்றுகின்றன. ஒரு தருணத்தைப் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க வேண்டும் என்று நினைக்காமல், அந்தத் தருணத்தில் நிஜமாக வாழ்வதை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன். என் அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் நான் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறிது காலம் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்கப் போவதாக ரியா அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு, ரியா சக்ரவர்த்தி ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டதோடு, கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

