கோலாலம்பூர்:
பிகேஆர் (PKR) கட்சியின் ஆகப் பெரிய பலமாகத் திகழ்ந்த அடிப்படை நீதிக்கொள்கைகள் முற்றிலும் மீறப்பட்டுவிட்டதால், தாம் மீண்டும் அக்கட்சிக்குத் திரும்பப் போவதில்லை என அதன் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமைக்கோ அல்லது அன்வாருக்கோ தாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்குத் துணைத் தலைவர் பதவியை எவ்வித போட்டியுமின்றி வழங்க முன்வந்ததன் பின்னணியில், தம்மை ஒரு கைப்பாவையாக மாற்றி, தமது அரசியல் செல்வாக்கை முடக்கும் சூழ்ச்சி ஒளிந்திருந்ததை உணர்ந்துகொண்டதாக இன்று அவர் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சிக்குள் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் மலிந்துவிட்டதாகச் சாடியுள்ள ரஃபிசி, தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய கட்சித் தலைமைத்துவமே அதற்கு முரணாகச் செயல்படுவதாகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். மேலும், பதவிகளுக்காகத் தம்மால் ஒருபோதும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரஃபிசி ரம்லி மற்றும் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி ஆகியோர் இணைந்து, ‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (Parti Bersama Malaysia) கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




