Last Updated:
கர்நாடக அரசின் இலவச டிக்கெட் கோரிக்கையால் தான் ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருக்குப் பதிலாக அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இலவச டிக்கெட் கோரிக்கையால் தான் ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருக்குப் பதிலாக அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சாம்பியனாக இருப்பதால், வழக்கப்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை வரும் 31ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த ஐபிஎல் தலைவர் அருண் துமால், ரசிகர்களுக்கான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு மைதானத்தில் உள்ள ஒட்டுமொத்த இருக்கையில், 15 சதவீதம் அளவுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில், அவர்கள் கூடுதலாக 10 ஆயிரத்து 57 டிக்கெட்டுகள் கேட்டதாக அருண் துமால் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள், கிரிக்கெட் கிளப்புகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சலுகை விலையிலும், இலவசமாகவும் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 35 ஆயிரம் பேர் மட்டும் அமரும் வகையில் உள்ள மைதானத்தில் ரசிகர்களுக்கு 20 ஆயிரம் டிக்கெட் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டதால், இறுதிப்போட்டியை அகமதாபாத்துக்கு மாற்றியதாக அருண் துமால் தெரிவித்துள்ளார்.

