Last Updated:
படகு மூழ்கிய போது அவசர அவசரமாக பாதுகாப்பு ஜாக்கெட் வழங்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து 9 பேர் பலியான விபத்தில், நீருக்குள் பாதி படகு மூழ்கிய போது அவசர அவசரமாக பாதுகாப்பு ஜாக்கெட் வழங்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ், கமாரியாவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேர் ஜபல்பூர் அருகே உள்ள பர்கி அணைப் பகுதியில் சுற்றுலாப் படகில் பயணம் செய்தனர். அவர்களுடன் சேர்த்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அந்த சொகுசுப் படகு, அதீத காற்றால் நிலை தடுமாறி நீரில் கவிழ்ந்தது.
இதில் பயணிகள் நீரில் மூழ்கி மாயமான நிலையில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் காமராஜ், அவரது மனைவி, மகன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமராஜின் ஒரு மகன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மத்திய பிரதேச விபத்து – அதிர்ச்சி காட்சி
பர்கி அணையில் நேற்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் திருச்சியை சேர்ந்த குடும்பத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு; படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் பாதுகாப்பு உடைகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு #MadhyaPradesh #BoatAccident #BargiDam… pic.twitter.com/q2QOpk5IUF
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 2, 2026
மேலும், ஒரு தாய் தனது 3 வயது மகனை இறுக அணைத்தபடி உயிரிழந்து கிடந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த நிலையில், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மோகன் யாதவ், படகு போக்குவரத்திற்குத் தற்காலிகத் தடை விதித்தார்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான இந்த படகு கவிழ்வதற்கு முன்பு வீசிய காற்றை அதில் இருந்து பயணிகள் ரசித்தப்படி கூச்சலிட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. படகில் இருந்தவர்கள் பாதுகாப்பு ஜாக்கெட் அணியாமல் அமர்ந்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து படகு கவிழ தொடங்கியதும் பயணிகளுக்கு படகு ஊழியர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கியதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து.. கடைசி நேர திக்.. திக்… வெளியான புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு!


