இன்று (மே 01, 2026) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
1. மஸ்கெலியாவில்…
மஸ்கெலியா செங்கொடி சங்கத்தின் மாநிலப் பிரதிநிதி திரு. மருதவீரன் தலைமையில் மே தின விழா நடைபெற்றது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஸ்வீக் தோட்ட ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்டத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
2. கல்முனையில் …
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தின நிகழ்வு, தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது. இதன்போது பின்வரும் முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன:
• அரசியல் கோரிக்கைகள்: 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையை இயங்கச் செய்தல்; சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான வர்த்தமானியை வலுப்படுத்துதல்; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானியில் வெளியிடுதல்.
• நிர்வாகக் கோரிக்கைகள்: ஒட்டுசுட்டான், கண்டாவளை, கராச்சி மற்றும் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குப் புதிய பிரதேச சபைகளை அமைத்தல்; கல்முனை ஆதார வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்துதல்.
• ஊழியர் நலன்கள்: அரசாங்க ஊழியர்களுக்கு 30,000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குதல்; ஓய்வூதியதாரர்களுக்கு 10,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்குதல்; சீருடைப்படியை 10,000 ரூபாவாக உயர்த்துதல்.
• கல்வி: கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான 2026 இடமாற்ற முன்மொழிவுகளை உடன் அமுல்படுத்துதல் மற்றும் கல்முனை மத்தி, பொத்துவில், உஹண கல்வி வலையங்களை அங்கீகரித்தல்.
3. முத்தரிப்புத்துறையில்…
மன்னார் – சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கடற்கரையில் விசேட ஆராதனைகள் மற்றும் கடல் ஆசீர்வாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து நீச்சல், படகு சவாரி, மரதன், கரப்பந்து மற்றும் வலைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

